கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சாசானூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன்கள் மூர்த்தி (32), சீனிவாசன் (27). மூர்த்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அண்ணன், தம்பி இருவருமே அருகருகே வீட்டில் வசித்து வருகிறார்கள். இருவரும் கட்டட வேலை செய்து வருகிறார்கள்.
நேற்றிரவு மூர்த்தி, தனது தம்பி சீனிவாசனிடம் மதுபோதையில் தங்களது சொத்தான ஒன்றரை ஏக்கர் நிலத்தைப் பிரித்துக்கொடு என்று கேட்டு தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த சீனிவாசன், அண்ணனின் தலையில் கட்டையால் அடித்ததில் மூர்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தாகத் தெரிகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஊத்தங்கரை காவல்துறையினர், இறந்த மூர்த்தியின் உடலைக் கைப்பற்றி, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு சீனிவாசனைக் கைது செய்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'ரோஜா'வுடன் மீண்டும் இணையும் அரவிந்த்சாமி!