கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி பாரதிதாசன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெயலட்சுமி. பேசும் திறனற்றவர், இவரது கணவர் கடந்தாண்டு உயிரிழந்துவிட, தனது இரண்டு மகன்களை வளர்த்து வருகிறார். இதில் மூத்த மகன் விஷ்வா(18) பெங்களூருவில் வேலை செய்து வரும் நிலையில், இளைய மகன் ரவி (16) ஒசூர் அரசு தொழிற்கல்வி (ஐடிஐ) முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.
ஆன்லைன் வகுப்பு எனக்கூறி கைப்பேசி உபயோகித்து வந்த ரவி நண்பர்களுடன் குழுவாக இணைந்து பப்ஜி விளையாட்டில் அதிக மோகம் கொண்டு எந்நேரமும் கைப்பேசியில் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தினா், அவரது உறவினா்கள் பலமுறை கண்டித்தும் வீட்டில் தனிமையாக இருக்கும் போதெல்லாம் சிறுவன் ரவி பப்ஜியிலேயே மூழ்கி உள்ளார்.
இந்நிலையில் தாய் ஜெயலட்சுமி கட்டட வேலைக்கு சென்றுவிட்டு நேற்று (ஜன.30) மாலை வீடு திரும்பிய நிலையில், வீட்டின் உள்பக்கம் தாளிட்டிருப்பதை கண்டு சந்தேகமடைந்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை திறந்த போது, வீட்டில் உள்ள மின்விசிறியில் சிறுவன் ரவி தாயின் புடவையை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதைக்கண்ட ஜெயலட்சுமி செய்வதறியாமல் கதறி அழுத காட்சி காண்போரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. தகவலறிந்து வந்த ஒசூர் நகர காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:வரும் பிப்.14 தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி!