கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள சாரண்டப்பள்ளி கிராமத்தில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரி கிராமத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. அண்மையில் பெய்த கனமழையால் இந்த ஏரி நிரம்பியுள்ளது. கடந்த 20ஆண்டுகளுக்குப் பின்பு, ஏரி நிரம்பியுள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், விவசாயம் செழிக்க- மக்கள் நலமுடன் வாழ வேண்டி, சாரண்டப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் பொது மக்கள் ஒன்று சேர்ந்து, ஏரியில் தெப்பம் விட்டு திருவிழா கொண்டாடினர். சாரண்டப்பள்ளி, காளேநட்டி கிராம மக்கள் மேள தாளங்கள் முழங்க, பூக்கரங்களை ஊர்வலமாக கொண்டு வந்து, சாரண்டப்பள்ளி ஏரிக்கரையில் உள்ள வண்ணம்மா தேவி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களை நடத்தினர். அதனைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் வண்ணமாதேவியை அமர வைத்து, ஏரி முழுவதும் சுற்றி வந்தனர். தெப்பம் ஏரியில் மூன்று முறை சுற்றி வந்தது.
இந்த தெப்பத்திருவிழாவில் சாரண்டப்பள்ளி, காளேநட்டி, நேரலட்டி, பாசப்பள்ளி, பள்ளப்பள்ளி, சென்னசந்திரம், மாயநாயகனப்பள்ளி, ஜோகட்டி, கக்கதாசம், மல்லசந்திரம், ஓசூர் அக்ரஹாரம், சாத்தி நாயகனப்பள்ளி, தேவர் உலிமங்கலம், பிபி.பாளையம், தாரவேந்திரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வண்ணம்மா தேவிக்கு ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு அன்னதானமும் வழங்கப்பட்டது.