ஓசூர்: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நாம்தார் உசேன் (34). இவர் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் ஒசூர் பகுதியில் வழிப்பறி செய்ததாக நகர காவல்நிலையத்தில் 4 வழக்குகளும், அட்கோ காவல்நிலையத்தில் ஒரு வழக்கும் இருப்பதால் ஒசூர் அட்கோ காவல் துறையினர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆந்திரா மாநிலத்தில், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு நாம்தார் உசேனைக் கைது செய்து ஒசூர் அழைத்து வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நாம்தார் உசேனைத் திருடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட திருப்பதி மெஜஸ்டிக் என்கின்ற இடத்திற்கு அழைத்துச் சென்று காவல் துறையினர் செயல் விளக்கமாக விசாரித்து வந்தனர். அப்போது, குற்றவாளி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திலிருந்த கத்தியை எடுத்து எஸ்ஐ உட்பட மூன்று காவல் துறையினரின் கை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து இடது கையில் காயமடைந்த எஸ்ஐ வினோத் அவர் வைத்திருந்த துப்பாக்கியால் குற்றவாளியை வலது கால் முட்டிக்கு கீழ் சுட்டு மடக்கி பிடித்துள்ளார். குற்றவாளி கத்தியால் குத்தியதில் எஸ்ஐ வினோத், தலைமை காவலர் ராமசாமி, முதல் நிலை காவலர் விழியரசு ஆகியோருக்கு கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் மூவரும் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேப்போல் தப்பிச்செல்ல முயன்ற போது வலது காலில் குண்டடிபட்ட நாம்தார் உசேனுக்கு ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணைக்குச் சென்ற இடத்தில் திரைப்படம் பாணியில் குற்றவாளி கத்தியால் குத்தி தப்பிக்க முயன்றதும், போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசுபொருளாகி உள்ளது.
இதையும் படிங்க: பெட்ரோல் குண்டு விவகாரம்: கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க கோரி நீதிமன்றத்தில் மனு!