கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள இமாம்பாடா பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் அலி (55). இவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி துணை அமைப்பாளராக இருந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி ஓசூர் காமராஜ் காலணியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பின்னர் இந்தக் கொலை தொடர்பாக, ஓசூர் சாந்திநகரைச் சேர்ந்த கஜேந்திரன் (32), எஸ்.முதுகானப்பள்ளியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (22), கொத்தனூர் ராம்நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (23), மருதாண்டப் பள்ளியைச் சேர்ந்த யஷ்வந்த்குமார் (24) ஆகிய நால்வர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இதையடுத்து, கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜிதின் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் ஐந்து பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிகங்காதர் மாவட்ட ஆட்சியர் பிரபாகரனுக்கு பரிந்துரை செய்தார். அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஐந்து பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க:முந்திரி மரத்தில் தற்கொலை செய்துகொண்ட பெண் - காவல் துறையினர் விசாரணை!