கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவைகளை செய்துவந்த திமுக சிறுபான்மை பிரிவின் மாவட்ட துணை அமைப்பாளர் மன்சூர் அலி என்பவர், கடந்தவாரம் ஓசூர் அரசுப் பள்ளி மைதானத்தில் நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலைசெய்யப்பட்டார்.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மன்சூர் அலியின் கொலையானது, பழிக்குப்பழியாகச் செய்யப்பட்டதா என ஓசூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தநிலையில், மன்சூரை கொலை செய்ததாக கஜா என்பவர் உள்பட நான்கு பேர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தனர்.
இந்நிலையில் சரணடைந்த நான்கு பேரை நீதிமன்றக் காவலில் எடுக்க ஓசூர் நகர காவல் துறையினர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதனையடுத்து இன்று கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் ஓசூர் நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர்.
மேலும் அசம்பாவிதங்களைத் தடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஏடிஎஸ்பி சக்திவேல் தலைமையில் ஒரு டிஎஸ்பி, நான்கு இன்ஸ்பெக்டர்கள் உள்பட 30க்கும் அதிகமான காவல் துறையினர் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஏந்தியவாறு பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
அதனையடுத்து, மன்சூர் அலி கொலை வழக்கில் சரணடைந்த நான்கு பேரும் ஓசூர் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விசாரித்த நீதிபதி, மீண்டும் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
கொல்லப்பட்ட திமுக பிரமுகரும் ரவுடியாக இருந்த நிலையில், சரணடைந்த ரவுடி கஜா உள்பட அவரது கூட்டாளிகள் ஓசூர் நீதிமன்றத்திற்கு பலத்த காவல் துறை பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டது அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கிரிக்கெட் சூதாட்டம் - முக்கிய குற்றவாளியை தப்ப வைக்க ரூ. 3 லட்சம் லஞ்சம்; சிக்கலில் இன்ஸ்பெக்டர்