சென்னை: "செறிவூட்டப்பட்ட அரிசியை, தலசீமியா எனப்படும், மரபணு சார்ந்த ரத்த சோகை போன்ற உடல் நல குறைபாடு உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது" என்ற விழிப்புணர்வு வாசகத்தை நீக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக பூவுலகின் நண்பர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் செறிவூட்டப்பட்ட உணவுகளின் பையில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகத்தை நீக்குவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவுகளின் செறிவூட்டல்) ஒழுங்குமுறைகள், 2018ல் திருத்தங்களை மேற்கொள்ள பொதுமக்களின் கருத்துக்களைக்கோரி ஒரு அறிவிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவுகளின் செறிவூட்டல்) ஒழுங்குமுறைகள், 2018ன் படி "தலசீமீயா (Thalassemia) பாதிப்பு உடையவர்கள் மருத்துவ மேற்பார்வையில் இரும்புச்சத்தால் செறிவூட்டப்பட்ட உணவை உட்கொள்ளலாம், சிக்கில் செல் அனிமீயா(Sickle Cell Anaemia ) பாதிப்பு இருப்பவர்கள் இரும்புச்சத்தால் செறிவூட்டப்பட்ட உணவை உட்கொள்ளக்கூடாது" எனும் எச்சரிக்கை வாசகத்தை செறிவூட்டப்பட்ட உணவு விநியோகம் செய்யும் பைகளில் அச்சிட்டிருப்பது அவசியம்.
ஆனால், மேற்கூறியவாறு தமிழ்நாட்டில் இச்செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்படவில்லை. ஏற்கெனவே தலசீமியா, சிக்கில் செல் அனிமீயாவால் பாதிக்கப்பட்டோர் இந்த செறிவூட்டப்பட்ட உணவை உட்கொள்வதால் அவர்களுக்கு வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்பதால் இந்த எச்சரிக்கை வாசகத்தை அச்சிடுவது மிகவும் அவசியமாகும்.
எந்த எச்சரிக்கை வாசகமும் இல்லாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்படுவது தவறு எனக்கூறி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2023ஆம் ஆண்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க: விவாதத்துக்குள்ளாகிய செறிவூட்டப்பட்ட அரிசி நல்லதா? கெட்டதா? உணவியல் ஆலோசகர் கூறுவது என்ன?
இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு மிகவும் ஆபத்தானதும் அடிப்படை மனித உரிமை மீறலுமாகும். ஒரு மனிதன் தான் எந்த உணவை உட்கொள்ள வேண்டும் என்பதும் அந்த உணவில் என்னவெல்லாம் இடம்பெற்றுள்ளது என்பதை அறிந்துகொள்வதும் அடிப்படை உரிமைகளாகும்.
அந்த உரிமைகளைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு மேற்கொள்ளும் இந்த திருத்தம் கண்டனத்திற்குரியதாகும். செறிவூட்டப்பட்ட அரிசி உற்பத்தியில் ஈடுபடும் சில நிறுவங்களின் நலனுக்காக ஒன்றிய அரசு உரிய ஆய்வுகளையும், பரிசோதனைகளையும் மேற்கொள்ளாமல் அவசர அவசரமாக செறிவூட்டப்பட்ட உணவுகளை வலிந்து திணிக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: இரும்புச் சத்து சேர்த்த அரிசி திட்டம் நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசும் பொதுமக்களும், எதிர்கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் என அனைவரும் இத்திருத்தத்தைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்க விரும்புவோர் Chief Executive Officer, Food Safety and Standards Authority of India, FDA Bhawan, Kotla Road, New Delhi- 110002 என்கிற முகவரிக்குக் கடிதமாகவோ அல்லது regulation@fssai.gov.in என்கிற முகவரிக்கு மின்னஞ்சலாகவோ நவம்பர் 18ந் தேதிக்குள் தங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கலாம்" என தெரிவித்துள்ளனர்.