சென்னை : புனரமைப்பு பணிகளுக்காக, பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள குறளகம் கட்டிடங்கள் உட்பட முழுவதுமாக இடிக்கப்பட உள்ளன. அங்கு 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய நவீன பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது.
இது குறித்து பிராட்வே பேருந்து நிலையத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், பெருநகர வளர்ச்சி குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். மேலும், தற்காலிகமாக அமைய உள்ள பேருந்து நிலையத்தையும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வடசென்னை வளர்ச்சி திட்டம் ஒட்டுமொத்த அரசு துறைகளும் ஒருங்கிணைத்து வடசென்னையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவோம் என்ற நோக்கத்தோடு பல்வேறு வகையில் மக்களின் தேவைகளை அறிந்து மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றி தர முதலமைச்சரால் தொடங்கப்பட்ட திட்டம் வடசென்னை வளர்ச்சி திட்டம்.
அதில் ஒரு பகுதியாக, பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார். சுமார் ரூ.820 கோடி செலவில் பிராட்வே புதிய பேருந்து நிலையம் உருவாக்கப்பட உள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவது குறித்தும், மூன்று முறை அந்த வியாபாரிகளை அழைத்து கூட்டங்களை நடத்தி உள்ளோம்.
பிராட்வே பேருந்து நிலையத்தில் சாலையோரம் வசிக்கக்கூடிய மக்களுக்கு, அதாவது நிரந்தர குடியிருப்பு இல்லாதவர்களின் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 41 குடும்பங்கள் அங்கு குடியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஏதாவது விடுபட்டிருந்தால் முறையான ஆவணங்களை கொடுத்தால், அவர்களையும் திட்டத்தில் சேர்த்துக் கொண்டு மாற்று இடம் வழங்கப்படும்.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் அனைத்தும் 2025ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்படும். அனைத்து அடிப்படை வசதிகளுடன் ராயபுரம் புதிய பேருந்து நிலையம் தற்காலிகமாக விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.
முதலமைச்சருடன் விவாதிக்க தயார் என்ற ஈபிஎஸ் கருத்து : சென்னை வாக்காளர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் என்றால் இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தான். மழை, வெள்ள காலங்களில் வீட்டில் பதுங்கி கொண்டு இருப்பதில்லை. மக்களுக்காக மழை வருவதற்கு முன்பாக களத்தில் தரையில் தன் காலை பதிக்கின்ற முதலமைச்சர் என்றால் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் தான்.
மக்கள் நலனுக்காக மக்களுக்காக களத்தில் இன்று போராடி சிறைக்குச் சென்றவர். தமிழ்நாட்டின் பொக்கிஷம், நம்முடைய முதலமைச்சர். பத்தாண்டு காலம் தன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஊர்ந்து வந்து முதலமைச்சர் பதவியை அனுபவித்தவர் நம்முடைய முதலமைச்சர் அல்ல. கடந்த 2021ம் ஆண்டு மக்களை சந்தித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர்.
கூவத்தூரில் ஏலம் விடப்பட்டு ஏலத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் எங்களுடைய முதலமைச்சர் கிடையாது என்பதை அடக்கத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதுபோன்ற விமர்சனங்களை முன்வைக்க வந்தால் எந்த விவாதத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க : "விவாதத்திற்கு தயார்" - ஈபிஎஸுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!
சென்னை பிராட்வே டிஎன்பிஎஸ்சி சாலையில் மருத்துவ மாணவர்களுக்கான விடுதி செயல்பட்டு வந்தது. சுமார் 60 வருட பழமையான கட்டடம் என்பதால் இதை இடித்து விட்டு உயர்நீதிமன்ற ஒருங்கிணைந்த கட்டடம் கட்ட அரசு முடிவு எடுத்தது.
இதற்காக இடிக்கும் பணிகள் கடந்த ஒரு வார காலமாக அதிகாரிகள் தலைமையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று திடீரென கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கட்டடம் இடிந்து விழுந்ததில், கட்டடத்தின் ஓரமாக சாலையில் சென்று கொண்டிருந்த மூன்று பேருக்கு காயங்கள் ஏற்பட்டன. இதனால் காயமடைந்த 3 பேரை அருகில் இருந்தவர்கள் ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இத்தகவல் தீயணைப்புத்துறையினருக்கும், போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினரும், போலீசாரும் இடிபாடுகளில் யாரும் சிக்கி உள்ளனரா என்று சோதனை செய்தனர். தொடர்ந்து சோதனை செய்ததில் யாரும் இடிபாடுகளில் சிக்கவில்லை என தெரிய வந்தது.
இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு இடிந்த கட்டடப் பகுதியினை ஆய்வு செய்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, "சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஒருங்கினைந்த கட்டடம் கட்டுவதற்காக இந்த கட்டடம் இடிக்கப்படும் பொழுது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுபோன்று இடிக்கும் பணி நடைபெறும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக" அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்