கிருஷ்ணகிரி: தமிழ்நாடு - கர்நாடகா எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரியின் தொழில் நகரமாக ஓசூர் கருதப்படுகிறது. ஓசூரிலிருந்து அண்டை மாநிலமான கர்நாடகாவிற்கு சட்டவிரோதமாக எம்.சாண்ட் மனல் கடத்தப்படுகிறதாக ஓசூர் சிவில் இன்ஜினியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாள்தோறும் 2ஆயிரம் லாரிகள் மூலம் எம்.சாண்ட் மணல் கர்நாடகாவிற்கு கடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மணல் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் சிவில் இன்ஜினியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் மணற் தட்டுப்பாட்டால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும், கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வதாகவும் சங்கத்தினர் கூறியுள்ளனர். அண்டை மாநிலத்திற்கு எம்.சாண்ட் மணல் கடத்தப்படுவதை கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய ஓசூர் சிவில் இன்ஜினியர் சங்கத்தினர், "ஓசூர் பகுதியில் கட்டுமானப் பணிகளுக்கு ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்டவைகளின் தேவை அதிகமாக உள்ளபோதும், கர்நாடக மாநிலத்தில் குவாரிகள் செயல்படாததால், ஓசூரிலிருந்து ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்டவை அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் இரவு நேரங்களில் 2ஆயிரம் லாரிகள் மூலம் கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஓசூர் பகுதிகளில் ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப்பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் கட்டுமானப்பொருட்கள் விலை அதிகரித்து விற்கப்படுவதால் வீடு கட்டுவோர் முதல் இன்ஜினியர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். அண்டை மாநிலத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுத்து, விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்'' என கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை!