கிருஷ்ணகிரி மாவட்டம் தொட்டமஞ்சு வன்னியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா (40). இவரது நண்பர் நாகராஜ் (27) இருவரும் சேர்ந்து காட்டுப்பன்றி வேட்டையாட வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். இருவரும் தனித்தனியாக நாட்டுத் துப்பாக்கியை வைத்து வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காட்டுப்பகுதியில் திடீரென சத்தம் கேட்டுள்ளது. சத்தம் வந்ததை அடுத்து நாகராஜ் காட்டுப்பன்றி வருவதாக நினைத்து சத்தம் வந்த திசையை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
நாகராஜ் சுட்ட உடன் பசப்பா துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துள்ளார். இதனையடுத்து அங்கு ஓடிச்சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்த நாகராஜ் காயம்பட்ட பசப்பாவிற்கு உதவி செய்ய முயற்சித்துள்ளார். இதில் சில நிமிடங்களிலேயே பசப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பசப்பா குண்டு பாய்ந்து இறந்தது குறித்து அவருடைய நெருங்கிய உறவினருக்கு நாகராஜ் தகவல் தெரிவித்து விட்டு தலைமறைவானார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பசப்பா உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து தப்பியோடிய நாகராஜை தேடி வருகின்றனர். வேட்டையாடச் சென்ற நண்பரை காட்டுப்பன்றி என நினைத்து சுட்டதில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:நீலகிரியில் பறவைகளின் வலசை பயணம் தொடங்கியது!