கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே ஈஜி புரா என்னும் இடத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை வைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக கடந்த 5 ஆண்டுகளாக செஞ்சி அருகே கொரக்கோட்டை எனுமிடத்தில் பிரம்மாண்ட பாறை கண்டறியப்பட்டு கோதண்டராமர் சிலை தயாரிக்கப்பட்டது. அந்த சிலையை பெங்களூரு எடுத்துச்செல்ல திட்டமிடப்பட்டு ராட்சத வாகனம் கடந்த 6 மாதத்திற்கு முன் கொண்டு வரப்பட்டது. பல்வேறு இன்னல்களுக்கிடையே இரண்டு மாதத்திற்கு பிறகு கிருஷ்ணகிரி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கோதண்ட ராமர் சிலை வந்தடைந்தது.
சிலையின் மொத்த எடை 380 டன் வாகனத்துடன் சேர்த்தால் 550 டன் உள்ளது என தெரிவித்து அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, சாம்பல் பள்ளம், சின்னாறு சூளகிரி, காமன்தொட்டி, சானமாவு பேரண்டப்பள்ளி, ஓசூர் தர்கா ஏரி போன்ற இடங்களில் உள்ள ஆற்றுப்பாலங்கள் அருகே மாற்றுப் பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. இதன் பின்னர் சிலை எடுத்து செல்ல திட்டமிடப்பட்டு சாம்பல் பள்ளம் இடத்திலேயே கடந்த மூன்று மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை கோதண்ட ராமர் சிலை பெங்களூரு நோக்கி பயணித்தது. தற்போது சின்னாறு எனுமிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சிலை இன்னும் இருபது நாட்களில் பெங்களூரு வந்தடையும் என கூறப்படுகிறது.