கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இங்கு 339 கோடி ரூபாய் மதிப்பில், கிருஷ்ணகிரி அருகே உள்ள போலுபள்ளி எனும் இடத்தில் இந்த மருத்துவக் கல்லூரி கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் 12 ஆயிரம் பயனாளிகளுக்கு 14 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கி இந்த அரசு சாதனை புரிந்துள்ளது. இந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் வாயிலாக கூடுதலாக இரண்டாயிரம் மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளை விட கூடுதலாக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளை தவிர்த்து, அரசு மருத்துவமனைக்கு மக்கள் வரும் காலம் விரைவில் ஏற்படும். 20 கோடி ரூபாய் மதிப்பில் கேன்சர் குணப்படுத்த இலவச சிகிச்சை வசதியும் அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டு, இந்த அரசு சாதனை நிகழ்த்தி உள்ளது.
விவசாயிகள், பெண்கள், கிராம மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்திவருகிறது. கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து மாநில எல்லை வரையில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டம், ஒசூா் வரையில் நீட்டிக்க அரசு பரிசீலனை செய்துவருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. சளி, காய்ச்சல், இருமல் போன்ற பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.
பின்னர் உரையாற்றிய துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், ”தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களின் தேவைகளை அறிந்து செயல்பட்டுவருகிறது. அனைத்து தரப்பு மக்களும் தங்களது தேவைகளை பெறும் அரசாக தமிழ்நாடு அரசு விளங்கிவருகிறது” என்று தெரிவித்தார்.
இந்த விழாவில், தலைமைச் செயலாளர் சண்முகம், உயர்கல்வி, சுகாதாரம், வருவாய் உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கொரோனா அச்சுறுத்தல்: சென்னை விமான நிலையத்தில் கடும் சோதனை