கோடைகாலம் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய பல்வேறு வனப்பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. வறட்சியில் தண்ணீரைத் தேடி காட்டுயானைகள், காட்டு எருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமங்களுக்குள் அவ்வப்போது புகுந்துவிடும் நிலையும் உள்ளது. இதனால் பயிர்சேதம், உயிர்சேதம் உள்ளிட்ட பெரும் பாதிப்பு ஏற்படும். இதனைத் தவிர்க்க வனத்துறையினர் வனப்பகுதியின் உள்ளே பல இடங்களில் தண்ணீர் தொட்டிகளை அமைத்து வனவிலங்குகளின் குடிநீர் தேவைகளை போக்கி வருவார்கள்.
இந்தாண்டு கோடை காலம் தற்போது தொடங்கி உள்ளதையடுத்து, காட்டுயானைகள் கூட்டம் வனப்பகுதியின் அருகேயுள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீரை தேடி அலைந்து திரிகிறது. இதன் காரணமாக ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகேயுள்ள வனப்பகுதியில் வனக்காவலர்களால் அமைக்கப்பட்டுள்ள குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.
அங்கு குட்டிகளுடன் வந்த காட்டுயானைகள் குளத்தில் தண்ணீரைக் குடித்து மகிழ்ந்தன. பொதுவாக யானைகள் அதிக அளவு தண்ணீரை குடிப்பவை, அதனால் குளத்திற்கு வந்த யானைகள் அனைத்தும் குளத்தில் உள்ள நீரை தங்களின் தேவைக்கு ஏற்ப வெகுநேரம் குடித்தன. இதனை பொதுமக்கள் வேடிக்கை பார்த்து ரசித்துச் சென்றனர்.