போச்சம்பள்ளி அடுத்த அத்திகானூர் கிராமத்தில் ஸ்ரீ பூனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு அக்கிராமத்தில் கன்றுவிடும் திருவிழா நடைபெறுவதாக சுவரொட்டிகள் அடிக்கப்பட்டு ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்தன. கன்றுவிடும் திருவிழாவிற்கான தட்டிகளும், தடுப்பு கம்பிகளும் கட்டி ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
இதனை நம்பி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட கன்றுகளும், காளைகளும் கொண்டு வந்திருந்தனர். நேற்று காலை சுமார் 8 மணியளவில் கன்றுவிடும் திருவிழாவை கிராம மக்கள் தொடங்கி வைத்தனர். இதனைக் காண சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர்.
சுமார் பத்திற்கும் மேற்பட்ட கன்று மற்றும் காளைகள் ஓடிய நிலையில், மத்தூர் காவல் துறையினர் அங்கு விரைந்து வந்து அனுமதியின்றி நடைபெற்ற கன்றுவிடும் திருவிழாவை தடுத்து நிறுத்தனர். இதனால் காண வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கன்றுகள், காளைகளுக்கு முன்பணமாக கொடுக்கப்பட்ட பணத்தை விழா குழுவினர் மீண்டும் அவர்களிடமே திருப்பி கொடுத்தனர்.
இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட கன்றுகளும், காளைகளையும் அதன் உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் அழைத்துச் சென்றனர். விழா குழுவினரை அனுமதியின்றி கன்றுவிடும் திருவிழா நடத்தக்கூடாது என காவல் துறையினர் எச்சரித்து சென்றனர்.