கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா அடர்வனப்பகுதியிலிருந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெளியேறும் காட்டுயானை கூட்டம், தமிழக எல்லையான ஜவளகிரி வனப்பகுதி வழியாக தமிழகத்தின் அய்யூர், தேன்கனிக்கோட்டை, சானமாவு உள்ளிட்ட பகுதிகளில் பல குழுக்களாக பிரிந்து சுற்றி வருகின்றன. மேலும், இந்தக் காலத்தில் காட்டுயானைகள் சானமாவு வனப்பகுதியிலிருந்து கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து பேரண்டப்பள்ளி வனப்பகுதி வழியாக ஆண்டுதோறும் கர்நாடக மாநிலத்திற்க்கு சென்று திரும்புவது வழக்கம்.
தற்போது தமிழக எல்லையான பாகலூர் பேரிகை அருகே உள்ள அமுதகொண்டப்பள்ளி வனப்பகுதியிலிருந்து கர்நாடக வனப்பகுதிக்கு நுழைய முயலும் காட்டுயானைகளை தடுக்கும் விதமாக, கர்நாடக எல்லைப்பகுதி கிராம மக்கள் வனப்பகுதியின் காய்ந்த செடிகளுக்கு தீயிட்டும், யானைகள் மீது கற்களை எறிந்தும் வருகிறார்கள்.
காட்டுயானைகள் தங்களுடைய வழித்தடத்தில் பயணித்து வருவதை தடுத்து வரும் கர்நாடக கிராம மக்களால், யானைகள் தமிழக எல்லையான அமுதகொண்டப்பள்ளி கிராமங்களை சுற்றியே வருகின்றன.இதனால் அப்பகுதி பொதுமக்கள்,விவசாயிகளுக்கு ஆபத்தான சூழல் நிலவி வருவதால் கர்நாடக, தமிழக வனத்துறையினர் யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட ஒருமனதான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேரிகை சுற்று வட்டார கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.