கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரு அருகே உள்ள பனைஏரிகோடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ். இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் இலவச மின் இணைப்பை பெறுவதற்காக அஞ்செட்டி மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அப்போது அங்கு பணிபுரியும் மின்வாரிய வணிக ஆய்வாளர் ராஜசேகர் என்பவர், மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என்றால், ரூ.45 ஆயிரம் கையூட்டாக வழங்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய ரூ. 20 ஆயிரம் பணத்தை கோவிந்தராஜிடம் கொடுத்து ராஜசேகரிடம் கொடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.
அவரும் அலுவலர்கள் கொடுத்த பணத்தை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று ராஜசேகரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் பணத்துடன் அவரை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த அலுவலர்கள் எத்தனை பேரிடம் கையூட்டு பெறப்பட்டுள்ளது?, இதன் பின்னனியில் யார் யார் இருக்கிறார்கள்?, என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.