கிருஷ்ணகிரி: கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களை தவிர்த்து பிற மாநிலங்களிலிருந்து கிருஷ்ணகிரி வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயச்சந்திரபானு ரெட்டி கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசந்திரபானு ரெட்டி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.11) ஒசூரில் பட்டு வளர்ச்சித்துறை அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வார்டுகளை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறது. ஒரு நாளைக்கு 1500 முதல் 2500 பொதுமக்களுக்கு கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனு.
மாவட்டத்திற்கு தற்போது 498 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை உயிரிழப்புகள் இல்லை, பெருந்தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் முக கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளிகளை பின்பற்ற வேண்டும் எனமாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம், இதனை பின்பற்றாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களை தவிர்த்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான் பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக தமிழ்நாட்டிற்குள் வரும் நபர்கள் கட்டாயம் இபாஸ் நடைமுறையை பின்பற்ற வேண்டும், எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் அதற்கான சோதனை நடைபெற்று வருகிறது, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திற்கு செல்கிறார்கள் என்பது சுகாதாரத்துறையினர் மூலம் கண்காணிக்கப்பட்டு தனிமைப்படுத்துதல் அல்லது அவர்களுக்கு நோய்த்தொற்று இருந்தால் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.