கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் 2005ஆம் ஆண்டு காவல் ஆய்வாளராக பணிபுரிந்துவந்தவர் முத்தமிழ் முதல்வன். 2005 நவம்பர் 15ஆம் தேதி பிரபல தினசரி செய்தித்தாளின் சென்னை, விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி ஆகிய பதிப்புகளில் பக்கம் எண் 8இல் "டீக்கடை பெஞ்ச்" என்கிற தலைப்பில் ஒரு தகவல் வெளியாகியிருந்தது. அதில் அன்றைய கிருஷ்ணகிரி தாலுகா காவல் ஆய்வாளர் முத்தமிழ் முதல்வன் குறித்துக் கூறப்பட்டிருந்தது.
இதற்கு அவர் மறுத்து, அச்செய்தித்தாளின் நிர்வாகிகள் வேங்கடபதி, லட்சுமிபதி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூன்று பேருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து வேங்கடபதி, “இந்தச் செய்தி எனக்குத் தெரியாமல் வெளியாகிவிட்டது” என வருத்தம் தெரிவித்தார். ஆனால் லட்சுமிபதி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் வழக்கறிஞர் அனுப்பிய நோட்டீசுக்கு பதில் அனுப்பவில்லை.
இதையடுத்து அவர்கள் மீது முத்தமிழ் முதல்வன் அவதூறு செய்தி வெளியிட்டதாக வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கு கிருஷ்ணகிரி நீதித்துறை நடுவர் எண் 1இல் நடந்து வந்தது. இவ்வழக்கில் லட்சுமிபதி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதித்துறை நடுவர் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில், தாங்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பதற்காக விலக்கு அளிக்கக் கேட்டு மனு கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் நீதிமன்றத்தில் ஆஜராகாமலிருக்க விலக்கு அளித்தும், அதே நேரத்தில் இந்த வழக்கின் தீர்ப்பின்போது இருவரும் அவசியம் வர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வழக்கில் கிருஷ்ணகிரி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளிப்பதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனாலும் லட்சுமிபதி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவதூறு செய்தி வெளியிட்டதற்காக செய்தித்தாளின் வெளியீட்டாளர் லட்சுமிபதி, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருக்கும் தலா இரண்டாண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.5 லட்சம் இழப்பீடாக அப்போதைய காவல் ஆய்வாளரும், ஓய்வுபெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்தமிழ் முதல்வனுக்கு வழங்க வேண்டும் என நீதித் துறை நடுவர் சுல்தான் ஆர்வின் உத்தரவிட்டார். மேலும், இரண்டு பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் அவர்களை பிணையில் வர முடியாமல் கைது செய்து சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.