தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடி கிருத்திகை அன்று முருகனுக்கு பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அந்தவகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள எட்றப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது.
இதற்காக சின்னகொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் உள்பட மேலும் அதே கிராமத்தை சேர்ந்த நான்கு பேர், முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது, தங்கள் முதுகுகளில் அலகு குத்திக்கொண்டு கிரேன் வாகனத்தில் 40 அடி உயரத்தில் இருந்தபடி முருகன் கோயிலை நோக்கி முழக்கங்களுடன் ஊர்வலமாகச் சென்றனர்.
மேட்டுப்பாளையம் என்னுமிடத்தில் ஊர்வலமாகச் சென்றுகொண்டிருந்தபோது அலகு குத்திச் சென்ற ஆகாஷ் நிலைதடுமாறி கீழே விழுந்தார். தான் கீழே விழுவதை உணர்ந்துகொண்ட ஆகாஷ் தண்ணீரில் குதிப்பதுபோல் தரையில் குதித்தார். இதனால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இதனையடுத்து நேர்த்திக்கடன் செலுத்த கிரேனில் சென்றவர்கள் கீழே இறங்கி நடந்துசென்று கோயிலில் சாமி தரிசனம் செய்து வீடு திரும்பினர். இந்தக் காணொலிப் பார்த்த நெட்டிசன்கள் லட்சம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது எனக் கூறி பகிர்ந்துவருகின்றனர்.