கிருஷ்ணகிரி மாவட்டம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தைச் சுற்றி மூன்று கிலோ மீட்டர் தூரம் நடைபாதை உள்ளது.
விளையாட்டு மைதான நிர்வாகம் இந்த நடைபாதையை ஒட்டி அரை ஏக்கர் பரப்பளவில் தோட்டம் அமைத்து மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறது. அங்குள்ள மரங்களிலிருந்து விழும் கழிவுச்சருகுகளை சேகரித்து ஒதுக்குப்புறமாக ஒரே இடத்தில் வைத்து தீ வைத்து அழிக்க வேண்டும், இல்லையெனில் நகராட்சி குப்பை கிடங்கிற்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு இல்லாமல், சிறுசிறு மரங்கள் அடங்கிய தோட்டத்திற்கு உள்ளேயும், பெரிய மரங்களின் வேர்களுக்கு அடியிலும் அத்தகைய குப்பைகளை சிறுசிறு பகுதிகளாகப் போட்டு பல்வேறு இடங்களில் வைத்து எரிக்கப்படுவதால் பல்வேறு இடங்களில் கருநிறப் புகை பரவி ஆரோக்கியமாக இருக்கும் மரங்களை அழிக்கிறது.
இதனால், ஆரோக்கியமாக இருக்கும் மரங்களின் கிளைகளில் உள்ள பச்சை இலைகள் காய்ந்து சருகாகின்றன. மேலும் மரங்கள் அழிவதுடன் காற்றும் மாசு படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குப்பைகளை சேகரித்து மைதானத்தை விட்டு வெளியே சென்று கொட்டவேண்டும். அதைவிடுத்து இவ்வாறு செய்வது நன்றாக உள்ள மரங்களையும் அழித்து ஒழிக்கும் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: