கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியைச் சேர்ந்த முதியவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர் தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் அமைந்துள்ள புட்டபர்த்தி சென்று திரும்பியபோது தமிழ்நாடு சோதனைச்சாவடி அருகே அடையாளம் காணப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இந்த நபர் சேலம் மாவட்ட கரோனா நோயாளியாகக் கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் நமது ஈடிவி பாரத்திடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மீண்டும் நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையாக கிருஷ்ணகிரி மாவட்டம் கரோனா நோய்த்தொற்று மத்திய அரசு அட்டவணைப் பட்டியலில் பச்சை மண்டலமாகத் தொடர்ந்து இருந்துவருகிறது.
முன்னதாக, கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து ஆந்திராவுக்குச் சென்ற முதியவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மாவட்ட மருத்துவநலப் பணிகள் இணை இயக்குநர் கோவிந்தன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன்மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் முதலில் பாதிக்கப்பட்ட நபர் என்று கண்டறியப்பட்டது.
இதனையடுத்து கரோனா பாதித்த முதியவர் சேலம் மாவட்ட அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இவர் சேலம் மாவட்ட கரோனா தொற்று ஏற்பட்டவர்களின் கணக்கில் இணைக்கப்பட்டதால், தமிழ்நாட்டில் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பச்சை மண்டலமாக நீடிக்கிறது.