சீன நாட்டில் ஏற்பட்டுள்ள கரோனா நோயால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த நோய் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கிருஷ்ணகிரி அருகே பர்கூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் சுகாதாரத்துறை சார்பில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பயிற்சி நடத்தப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏழு பொறியியல் கல்லூரி மற்றும் 9 பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறையின் இணை இயக்குநர் கோவிந்தன் கலந்துகொண்டு கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளித்தார். பயிற்சியின் போது, கரோனா வைரஸ் 2002ஆம் ஆண்டு தொடக்க நிலையில் கண்டறியப்பட்டதாகவும்; அப்போது பூனைகளால் பரவியது என்றும் அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு அதைவிட அதிகமாக ஒட்டகத்தில் இருந்து பரவியது என்றும் கூறினார். தற்பொழுது பரவி வரும் கரோனா வைரஸ் தான் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும், இந்த கரோனா வைரஸ் கடல் உணவுகளில் இருந்து பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் இந்த வைகயான வைரஸ் ஒருவர் இருமும் போது 2 மீட்டர் வரை பரவுகிறது என்றும் குறிப்பிட்டார்.
கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து பல்வேறு வகைகளில் பரவும் திறன் கொண்ட இந்த வைரஸ் இந்திய நாட்டின் தட்பவெப்பநிலையில் பரவாது என்றும் கூறிய கோவிந்தன், முன்னெச்சரிக்கையாக, மக்கள் கைகளை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும் என்றும், அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும் தெரிவித்தார்.
மேலும் இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் விழிப்புணர்வு - மாணவர்கள் பங்கேற்பு