தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 40 நாட்கள் வரை கரோனா வைரஸ் நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது.
வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பொருள்களை விற்பனைப் பரிவர்த்தனைக்காக கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்த லாரி ஒன்றுக்கு வேளாண் மற்றும் தோட்டக்கலை சாகுபடி பொருள்களை ஏற்றியபோது, இரண்டு மூதாட்டிகளுக்கு கரோனா நோய் தொற்று ஏற்பட்டது.
அந்த நோய்த்தொற்று எந்த அறிகுறியும் இல்லாமல் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர்கள் மூலம் தற்போது 15க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
நோய் தொற்று ஏற்பட்ட அனைவரும் சூளகிரி அருகேயுள்ள கிராமத்தில் இருந்து வந்ததால், அந்தக் கிராமம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து ஒசூரிலுள்ள இருவருக்கு கரோனா நோய் தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுகாதார நல அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறிகுறிகள் இல்லாத நோய் தொற்றாக இருப்பதால், அவர்கள் அனைவரும் விரைவில் குணமாகி வீடு திரும்புவார்கள் என்று மாவட்ட மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பொதுமக்கள் எந்த வகையிலும் அச்சப்படாமல் படிப்படியாக மாநில அரசு தளர்த்தி வரும் ஊரடங்கு உத்தரவை சரியான முறையில் புரிந்து கொண்டு கடைப்பிடிக்குமாறு மாவட்ட நிர்வாகம் பொது மக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் இரு வேறு இடத்தில் விபத்து: ஐந்து பேர் பலி!