தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, கரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம் ஆந்திர மாநில எல்லையான காளிகோயில் பகுதியில் வெளிமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள், சோதனையிட்டு உரிய இ-பாஸ் வைத்துள்ளார்களா என காவல், வருவாய், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களை கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பணிகளையும், வாகனத் தணிக்கை பணிகளையும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதன் ஒரு பகுதியாக கர்நாடக எல்லையான ஓசூர் ஜுஜுவாடி மாநில எல்லை சோதனைச் சாவடியில் வெளிமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் சிரமமின்றி இ-பாஸ் மூலம் அனுப்பபட உள்ளதையும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
மேலும் தமிழ்நாட்டிற்குள் நுழையும் அனுமதி பெறாத வாகனங்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உரிய அனுமதி பெற்று அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியருக்கு அறிவுரை வழங்கினார்.
அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவிலிருந்து - திருவண்ணாமலை மாவட்டம் ஜம்முனாமுத்தூர் செல்ல இருக்கும் 32 பேர் ஜுஜுவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சிரமமின்றி அரசுப் பேருந்து வசதி ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதையும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க:மது போதையில் தம்பியை கொன்ற அண்ணன் கைது!