கிருஷ்ணகிரி மாவட்டம், சுண்டம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் நின்ற டேங்கர் லாரி மீது ஆம்னி கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
ரமேஷ் என்பவர் தனது மனைவி, தனது குடும்பத்தினருடன் கடந்த 15 ஆண்டுகளாக கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது மனைவி, குழந்தை, உறவினர்கள் ஆகியோருடன் சொந்த ஊரான குடியாத்தத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு பணிகள் முடிந்த நிலையில் இன்று (மே.31) மீண்டும் குடியாத்தத்தில் இருந்து பெங்களூருக்கு ஆம்னி கார் மூலம் ஏழு பேரும் புறப்பட்டுச் சென்றனர். சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், சுண்டம்பட்டி என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலை ஓரம் நிறுத்தப்பட்டு இருந்த டேங்கர் லாரி மீது அவர்களின் ஆம்னி கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாகனத்தை ஓட்டி வந்த ரமேஷ், அவரது மனைவி, அவரின் ஒன்பது மாத குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ரமேஷின் அண்ணி, இரண்டு சிறுவர்கள் ஆகியோர் உடனடியாக மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், ரமேஷின் அண்ணி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
ஆம்னி கார் விபத்துக்குள்ளானதில் ஒன்பது மாத குழந்தை உள்பட ஐந்து பேர் பலியான துயர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.