கிருஷ்ணகிரி: வேலம்பட்டி அருகே பொதுக்குழாயின் முன்பு துணி துவைத்த ராணுவ வீரரின் மனைவிக்கும் திமுக பேரூராட்சி கவுன்சிலருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு ஏற்பட்டது. தனது மனைவிக்கு ஆதரவாக, அதனை தட்டிக்கேட்ட ராணுவ வீரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டநிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து திமுக கவுன்சிலர் தலைமறைவாகினார். இப்போது அவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டியைச் சேர்ந்தவர், சின்னசாமி(50). இவர் நாகோஜனஹள்ளி பேரூராட்சியின் 1-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன்(30) மற்றும் அவரின் தம்பி பிரபு(29) ஆகிய இருவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபாகரனின் மனைவி பிரியா, அவரது வீட்டின் முன்பு இருந்த பொதுக்குழாயின் அருகில் துணி துவைத்துள்ளார். இதை கவுன்சிலர் சின்னசாமி கண்டித்ததாக தெரியவருகிறது. இதனால், அவ்விருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், அங்கிருந்தவர்கள் இருவரையும் சமரசம் செய்து அனுப்பினர்.
இதைத்தொடர்ந்து, இந்த பிரச்னைக்காக ஆத்திரத்துடன் இருந்த திமுக கவுன்சிலர் சின்னசாமி 10-க்கும் மேற்பட்ட தனது உறவினர்களுடன் வீட்டிலிருந்த அவரது கணவரும் ராணுவ வீரர்களுமான பிரபாகரனையும், அவரது தம்பி பிரபுவையும் கற்கள், இரும்பு ஆயுதங்கள் ஆகியவற்றால் தாக்கியதாகத் தெரிய வருகிறது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று (பிப்.15) பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள திமுக கவுன்சிலர் சின்னசாமி உட்பட புலிப்பாண்டி, காளியப்பன் ஆகிய மூவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இவ்வாறு சின்டெக்ஸ் தொட்டி அருகே துணி துவைப்பதில் ஏற்பட்ட தகராறுக்காக, ராணுவ வீரரை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை' என கடிதம் எழுதிவைத்து மருத்துவ மாணவி தற்கொலை