நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீடித்து வருகின்ற நிலையில் அரசு மதுபானக் கடைகள் தொடர்ந்து செயல்படாததால் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பல்வேறு வகையில் புதுப்புது போதை பொருள்களை நாடி செல்கின்றனர். இதனால் பல உயிரிழப்பும் ஏற்பட்டு வருகின்றது.
மாவட்டங்கள்தோறும் பலரும் ரகசியமாக கள்ளச்சாராயம், சாராய ஊறல்கள், பழரச பீர்கள் என தயாரித்து காவல் துறையினரிடம் சிக்கி கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும், மற்றொரு போதைப் பொருளான பான் மசாலா, குட்கா போன்றவைகளின் விற்பனை படுஜோராக நகர்ப்புறங்களில் நடந்து வருகிறது. போதைக்கு அடிமையானவர்கள், 15 ரூபாய் குட்காவை சுமார் 50 ரூபாய்வரை கொடுத்து வாங்கி செல்கின்றனர் .
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விவசாய தோட்டத்தில் சுமார் 42 லட்ச ரூபாய் மதிப்பிலான பான் மசாலா, குட்கா, புகையிலை போன்ற போதை வஸ்துகளை விவசாய தோட்டத்தில் மறைத்து வைத்து, கடைகளுக்கு விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின்பேரில் ஓசூர் மத்திகிரி காவல் துறை தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர்.
இதனையடுத்து பெலகொண்டபள்ளி விவசாய தோட்டத்தில் சுமார் 8.5 டன் எடை கொண்ட பான் மசாலா, குட்கா இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் தினேஷ் பாபு , வினய் ரெட்டி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் மாதவன் என்பவர் தப்பி ஓடிய நிலையில் கைது செய்யப்பட்ட இருவரிடமும் மத்திகிரி காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .
மளிகை கடையில் குட்கா, பான் மசாலா பறிமுதல்!இதையும் படிங்க: