கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரபாகர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை, ஓசூர், சூளகிரி, தளி, கெலமங்கலம், வேப்பனபள்ளி ஆகிய 10 ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 11 லட்சத்து 92 ஆயிரத்து 325 வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
மேலும், மொத்தம் உள்ள மூன்று ஆயிரத்து 586 பதவிகளுக்கு எட்டு ஆயிரத்து 997 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்தத் தேர்தலுக்கு 23 தேர்தல் அலுவலர்களும், 456 உதவித் தேர்தல் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு ஆயிரத்து 92 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, அங்கு எட்டு ஆயிரத்து 852 வாக்குப்பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. அவை தேவையான மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு காவல் துறை பாதுகாப்புடன் வாக்குப்பதிவு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. 356 இடங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகள் எனக் கண்டறியப்பட்டு அவ்விடங்களில் இரண்டடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், கண்காணிப்புக் கேமராக்கள், காணொலி பதிவுகள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவேரிப்பட்டினம், ஊத்தங்கரை, தளி, ஓசூர், மத்தூர் ஆகிய ஒன்றியங்களில் நாளை முதற்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தயார்நிலையில் உள்ளது.
வாக்குப்பதிவு நடைபெறும் அன்று போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 04343233333 என்னும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : சென்னையில் விமானங்கள் ரத்து - பயணிகள் அவதி!