'தமிழ்நாடு' மாநில மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக, திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சியினர் அண்ணாவின் திருவுருவச்சிலை, படத்திற்கு மரியாதை செய்தனர்.
அதன்படி, கிருஷ்ணகிரி அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளரும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான அசோக்குமார் தலைமையில் அண்ணாவின் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ராசு வீதியிலுள்ள அண்ணாவின் முழு உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியின்போது அண்ணா அமைப்புசாரா ஓட்டுநர் சங்கம் மாவட்டச் செயலாளர் பால்ராஜ், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் வெங்கடாசலம், கிருஷ்ணகிரி சட்டப்பேரவைப் பொறுப்பாளர் காத்தவராயன், கூட்டுறவு வங்கித் தலைவர் நெடுஞ்செழியன், நகரச் செயலாளர் சீனிவாசன் இளைஞரணி சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதேபோல், திருச்சி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் ஆகியோர் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், மாநகரச் செயலாளர் அன்பழகன், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அதேபோல், மதிமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அமமுக மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, தேமுதிக சார்பில் விஜயகுமார் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் திராவிடர் கழகம், அண்ணா தொழிற்சங்கம், இந்திய நாடார் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.