கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனுநீதி நாள் நடைபெற்றது. அப்போது அங்கு மனு அளிக்க வந்த ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பக்கரை கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண், 9 வயதுள்ள இரு மகன்களோடு மண்ணெண்னையை ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயற்சித்தார். இதைக் கண்ட காவல் துறையினர் மூவர் மீதும் தண்ணீரை ஊற்றி மீட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி அப்பெண்னை அழைத்து வர உத்தரவிட்டு, பின் அவர் அளிக்க வந்த புகார் குறித்து கேட்டுள்ளார். அப்போது மீனாட்சி, கடந்த 10 வருடங்களுக்கு முன் தன்னை எம் செட்டிப்பள்ளியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுப்ரமணி என்பவர் திருமணம் செய்துகொண்டதாகவும், தங்களுக்கு சதிஸ்குமார், சுதர்சன் என இரு மகன்கள் உள்ளதாகவும் கூறினார்.
கணவர் தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து தன்னைச் சித்ரவதை செய்வதாகக் குற்றஞ்சாட்டிய அவர் 2017ஆம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டதாகவும், இருவருக்கும் விவாகரத்து சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
இந்த வழக்கை நடத்த வேண்டுமென்றால் தன் ஆசைக்கு இணங்க வழக்கறிஞர் ஒருவர் மிரட்டுவதாகக் கூறிய மீனாட்சி, வேறு வழியில்லாமல் மனமுடைந்து தன் பிள்ளைகளோடு தீக்குளிக்க முயற்சி செய்ததாகவும் கண்ணீரோடு தெரிவித்தார்.
அனைத்தையும் கேட்டறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, சம்பந்தபட்டவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெண்ணின் வாழ்வாதாரத்திற்காக அவருக்குப் பணி வழங்கவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஆயில் கடை உரிமையாளர் வெட்டி கொலை - ஐந்து பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலை!