கிருஷ்ணகிரி அருகே உள்ள மேல்பட்டி தர்மராஜா நகர்பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் - லட்சுமி தம்பதியினர் உறவினர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், தங்களின் மகள் சோனியா (20) கடந்த சில மாதங்களாக புதுபேட்டை பகுதியில் உள்ள ஜவுளி மற்றும் ரெடிமேட் துணியகத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்த கடையை பர்கூரை சேர்ந்த செல்வம் என்பவர் நடத்திவந்ததாகவும், கடத்த 14ஆம் தேதி வேலைக்கு சென்ற இளம்பெண் சோனியா மதியம் 3 மணிக்கு போனில் பெற்றோரை தொடர்பு கொண்டு ஜவுளிக்கடை உரிமையாளருடன் இருப்பதாகவும் என்னை தேட வேண்டாம் என கூறிவிட்டு, பிறகு போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டதாகவும் கூறினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு போய் பார்த்ததில் ஜவுளிக்கடை மூடப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். 65 வயதுடைய செல்வம் 20 வயது இளம்பெண்ணான தனது மகளை ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார். எனவே தனது மகளை மீட்டு, செல்வத்தை கைதுசெய்ய கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.