கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இன்று (பிப்.23) காலை சேலத்திலிருந்து பெங்களூரு நோக்கி தனியார் ஆம்னி பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது தருமபுரி மாவட்டம், செவலூர் பகுதியைச் சேர்ந்த 20 நபர்கள் கற்றாழை அறுவடை பணிக்காக ஆந்திரா மாநிலத்திற்குச் செல்ல கிருஷ்ணகிரி நோக்கி டிராக்டரில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென டிராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில், மோதிய வேகத்தில் டிராக்டர் தரையில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தால் டிராக்டரில் அமர்ந்திருந்த இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் மூன்று மாத பெண் குழந்தை உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், உடன் பயணித்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மக்னா யானையை பிடிக்க களமிறங்கிய கும்கி 'சின்னதம்பி'