தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதனால், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருள்கள் எடுத்துச் செல்லக் கூடாது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல், பரிசுப்பொருள்கள் கொடுக்கத் தடை போன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் கண்காணிக்கும் பணியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட குருபரப்பள்ளி சந்திப்பு சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர்.
அப்போது ஏணுசோனை கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவரின் காரை அலுவலர்கள் சோதனையிட்டதில் ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட நான்கு லட்சத்து 29 ஆயிரம் ரூபாயை அலுவலர்கள் பறிமுதல்செய்து சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தினேஷ் நிலம் வாங்குவதற்காகப் பணம் கொண்டுவந்ததாக கூறிய நிலையில் அலுவலர்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.