கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள கன்கார்டியா அரசு உதவிபெறும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் 105 மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு பயின்றுவந்தனர்.
இவர்களில் 20 பேர் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், இவர்களைத் தவிர மற்ற 85 மாணவ, மாணவிகளை பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.
மீதமுள்ள 20 மாணவ, மாணவிகளை தனித்தேர்வர்களாக பள்ளி நிர்வாகம் சார்பில் ஒளிவுமறைவாக விண்ணப்பிக்க வைத்துள்ளனர். தொடர்ந்து கரோனா தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வை ரத்துசெய்து பள்ளி மூலமாக நேரடித் தேர்வர்களாகப் பதிவுசெய்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சிபெற்றதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
தனித்தேர்வர்கள் தேர்ச்சிபெற்றதாகத் தமிழ்நாடு அரசு இதுவரை அறிவிக்காமல் விட்டுவிட்டது. இதனால் பள்ளியின் மூலம் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு நேரடியாக விண்ணப்பித்திருந்த 85 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுவிட்டனர்.
ஆனால் பள்ளியில் பயின்றும், பள்ளி வகுப்பு தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், பள்ளி நிர்வாகம் மூலம் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கப்பட்ட இருபது மாணவ மாணவியரின் தேர்ச்சி நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியரின் பெற்றோர் சிலர், மாவட்ட கல்வித் துறைக்குப் புகார் அளித்தனர். அதன்பேரில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பர்கூரில் உள்ள கன்கார்டியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகனை நமது ஈடிவி பாரத் சார்பில் தொடர்புகொண்டு கேட்டபோது, "மாவட்ட கல்வி அலுவலர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு விசாரணை அறிக்கை இன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை அறிக்கையை மாநில பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அனுப்பிவைக்கப்படும். பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வழங்கும் அறிவுரையின்படி பள்ளி மீதும் கவனக்குறைவாக இருந்த கல்வித் துறை ஆசிரியர், கல்வித் துறை அலுவலர்கள் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
இது தொடர்பாக மேலும் மாவட்ட கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், “இந்தக் கல்வி ஆண்டைப் பொறுத்தளவில் தொலைதூரப் பகுதிகளிலுள்ள பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் சரிவர செல்லாதது, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் குளறுபடி, திறனற்ற ஆசிரியர்கள் உள்ளிட்ட காரணங்களால் வேண்டுமென்றே இத்தகைய மாற்று முறையில் பள்ளி மாணவர்களைத் தேர்வுக்கு அனுப்பும் போக்கு இந்தக் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிக்கூடங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது” என்றார்.