கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 'ஓசூர்' உள்ளது என்றாலும், ஓசூர் அருகே 'கிருஷ்ணகிரி' எனக் கூறும் அளவிற்கு பிரபலமான நகரம் இந்த ஓசூர். குண்டூசி முதல் விமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்பேட்டைகளை கொண்டதால் ஓசூர் 'குட்டி ஜப்பான்' என அழைக்கப்படுகிறது.
சீரான சீதோஷ்ண நிலை காரணமாக ஓசூர் எப்போதும் குளிர்ந்து காணப்படுவதால் ஆங்கிலேயர்களால் 'லிட்டில் இங்கிலாந்து' (Little England) என்றும் ஓசூருக்கு பெயர்கள் உண்டு. மாவட்ட தலைநகரமல்லாத முதல் மாநகராட்சி என்கிற பெருமையும் ஓசூரேச் சாரும். செவிடபாடி என அழைக்கப்பட்ட ஓசூர் தலைக்காட்டை தலைநகராகக் கொண்டு ஆண்ட கங்க மன்னர்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்துள்ளது.
இராசராச சோழனின் ஆட்சிக் காலத்தால் செவிடபாடியை உள்ளடக்கிய கங்க நாட்டை சோழர்கள் கைப்பற்றி தங்கள் ஆட்சிக்குள் கொண்டு வந்தார்கள். சோழப் பேரரசு வலிமை குன்றிய பிறகு போசளர்கள் ஓசூரைக் கைப்பற்றினர். பின்னர் விஜயநகரப் பேரரசு, மைசூர் உடையார்கள், ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்றோரின் ஆட்சியின் கீழ் ஓசூர் இருந்தது. இறுதியில் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் வந்து சேர்ந்தது.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் (1845 - 1850) சேலம் மாவட்ட கலெக்டர் (சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்) வால்டன் லிலியட், ஓசூரை சேலம் மாவட்டத்தின் தலைமையகமாக செய்தார். பின்னர் தலைநகரம் சேலத்துக்கு மாற்றப்பட்ட போதிலும் சேலம் மாவட்டத்தின் கோடைக்கால தலைநகராக ஓசூர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முடியும்வரை நீடித்தது.
இப்படி பலரின் ஆட்சிக் காலத்தை கண்ட ஓசூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 1875ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி திறப்பு விழா காணப்பட்டது. 1947 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில், இக்கட்டடம் சேலம் மாவட்டம், தருமபுரி மாவட்டத்தை தொடர்ந்து தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட சார் ஆட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.
148வது பிறந்தநாள் காணும் ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகம்: 1947ஆம் ஆண்டு E.C. அல்லர்டீஸ் என்பவர் முதல் தற்போது 77வது சார் ஆட்சியராக சரண்யா IAS அவர்கள் பதவி வகித்து வருகிறார். 1875ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று 148வது பிறந்தநாள். தற்போது அரசு அலுவலகங்கள், கட்டடங்கள் 20 முதல் 30 ஆண்டுகள் பழுதடையாமல் இருப்பதே அரிதிலும் அரிது.
ஆனால், பிரம்மாண்டமான முறையில் பெரிய தூண்கள் அப்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப டிசைன்களால் ஓடுகள் அமைத்து கட்டப்பட்டுள்ளது. சுண்ணாம்பால் கட்டப்பட்ட சுவர்கள், இன்றுவரை கரையான்கள் அரிக்காமல் திடமாக நிற்கும் ஜன்னல் கதவுகள், மேலும் ஆங்கிலேயே காலத்தில் பயன்படுத்தப்பட்ட மரப்பெட்டி, மரமேஜைகள் இன்றளவும் எவ்வித சேதமின்றி பயன்பாட்டிலேயே உள்ளன.
ஒன்றரை நூற்றண்டுகளை கண்டுள்ள இந்த ஓசூர் சார் ஆட்சியர் அலுவலக கட்டடம், இனியும் ஒரு நூற்றாண்டு காலம் உறுதியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆங்கிலேயே ஆட்சிக்கால தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட சார் ஆட்சியர் அலுவலகம் இன்றும் கம்பீரமாய் நம் கண்முன் நிற்கிறது.
இதையும் படிங்க: மனைவிக்கு You tube பார்த்து பிரசவம் செய்த இயற்கை ஆர்வலர்.. பரிதாபமாக உயிரிழந்த மனைவி..