கரூர் நகராட்சிக்குள்பட்ட காவேரி நகர் நூலகத்திலிருந்து மணப்பாறை ரயில்வே கேட் வரை குளித்தலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டாட்சியருக்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் நகராட்சி நிர்வாகம் சாலை அமைத்துவிட்டதாக சில வருடங்களுக்கு முன்பு இவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
பின்னர் நீதிமன்றம் அவருக்குச் சொந்தமான இடம் என 2016ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதன் பிறகு இவர் சாலை இருபுறமும் கல் ஊன்றி வேலி அமைத்துள்ளார். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.
இது குறித்து ஆறு மாதங்களாக பொதுமக்கள் மாவட்ட அலுவலர்கள், அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் அப்பகுதி இளைஞர்கள் அந்தச் சாலைக்கு ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் கொண்டாடினர். அப்போது அவர்கள் சாலைக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி ஒப்பாரிவைத்தனர்.
மேலும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடாந்து சாலைக்கு மலர் வளையம் வைக்கப்படும் என இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 2 மூதாட்டிகளின் வங்கிக் கணக்கிலிருந்து 1.50 லட்சம் ரூபாய் மோசடி