கரூர்: பாரதிய ஜனதா கட்சி சார்பில், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அண்ணாமலை, கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று(ஏப்.28) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள உத்தரவுகள் படி அனைத்து வழிகாட்டுதலையும் கடைபிடிப்போம். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2 ஆம் தேதி, கரோனா தொற்று பெரிதாகப் பரவாது இருக்க தேர்தல் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்.
தேர்தல் வெற்றியை பொறுத்தவரையில், கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி மட்டுமல்ல கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய தொகுதிகளில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.
தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக அரசு ஆட்சி அமைக்கும். பாரதிய ஜனதா கட்சி பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தவறான கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், பெண்களுடைய ஆதரவு தமிழ்நாடு அரசுக்கு அதிக அளவில் இருப்பதையே வாக்குப்பதிவு விழுக்காடு காட்டுகிறது. மத்திய அரசு பொது மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கிவருகிறது.
மாநில அரசும் இலவசமாக வழங்கி வருவதால் தடுப்பூசி விலையேற்றம் குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. 18 வயது நிரம்பியவர்களுக்குத் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட உள்ளது. எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இணைந்து கரோனாவை விரட்டியடிக்க வேண்டும். தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். அரசு மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கும் நிலைக்கு மக்கள் ஏற்படுத்தக் கூடாது" என கேட்டுக்கொண்டார்.