தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, கரூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள், ஆறுகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களைத் தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைக்கும் வண்ணம், கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம், நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நங்கம் காட்டு ஏரியை தூர்வாரும் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் தொடங்கி வைத்தார்.
இதில் ஏழு ஏரிகள், மூன்று வாய்க்கால்களில் 42.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் வகையிலான 11 பணிகள் ரூ.1.38 கோடி மதிப்பில் நடைபெறவுள்ளன. அதன் ஒருபகுதியாக தற்போது நங்கவரம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட நங்கம்காட்டில் சுமார் 4 கிலோமீட்டர் நீளத்திற்குத் தூர்வாரும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ், கரூர் மாவட்டத்தில் உள்ள நங்கம்காட்டு ஏரி, பனையூர்குளத்து ஏரி, கோலைகாரன் கோவில் ஏரி, புரசம்பட்டி ஏரி, சிவாயம் ஏரி, இனுங்கூர் ஏரி, நங்கம் தொகைக்கரை வாய்க்கால், பெட்டவாய்த்தலை, பொய்யாமணி பள்ளவாய்க்கால் ஆகிய நீர் வழித்தடங்கள் 42.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர்வாரப்பட உள்ளன.
நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட காவிரி வடிநிலக்கோட்ட பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட பல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதே போல், 144 தடை உத்தரவின் காரணமாக, ஏழை-எளிய பொதுமக்களுக்கு அம்மா உணவகங்களில் விலையில்லாமல் வழங்கப்படும் உணவின் தரத்தை பரிசோதிக்கும் வகையில், தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனும் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவினைச் சாப்பிட்டு, ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினர்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் கண்ணதாசன், குளித்தலை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் விஜய விநாயகம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: வெறிச்சோடி காணப்படும் டாஸ்மாக்- என்ன நடந்தது திருவாரூரில்?