கரூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி மையங்கள் முன்பு குவிந்து வந்தனர்.
ஆனால் நேற்றும் (ஜூன்.08) இன்றும் (ஜூன்.09) தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி இருப்பு இல்லை என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இது குறித்து சுகாதாரத் துறை இணை இயக்குநர் சந்தோஷ்குமாரிடம் கேட்டபோது, ”கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இன்றுவரை 1,11,299 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. கரூர் மாவட்டத்தில் இதுவரை 1,17,676 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரை அரசு வழங்கிய தடுப்பூசி தினந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு விட்டன. தற்போது கைவசம் தடுப்பூசி இல்லை. அடுத்து தடுப்பூசி கரூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும்போது பொதுமக்களுக்கு முன்னதாகவே அறிவிப்பு செய்யப்பட்டு முகாம்களில் தடுப்பு ஊசி செலுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.