கரூர்: நாடு முழுவதும் கடந்த 2006ஆம் ஆண்டு அக்டோபர் 2 முதல், முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தால் துவங்கப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் (The Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme), கிராமப்புறத்தில் உள்ள ஏழைகளுக்கு 100 நாட்களை வேலை நாட்களாக உறுதி செய்யும் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
குறைந்தபட்ச வேலை உத்தரவாம், நிர்ணயிக்கபட்ட ஊதியம் என்ற முறையில் கிராமப்புறத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளூர் பணியாளர்களைக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மரங்கள் வளர்த்தல், ஏரி குளங்கள் சீரமைத்தல் எனத் தொடங்கி, நாளடைவில் விவசாயப் பணிகளில் மக்களை ஈடுபடுத்தி கிராமத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவது என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 158 ஊராட்சிகளில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் இத்திட்டத்திற்கான பணிகளானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேட்டமங்கலம் ஊராட்சியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், அந்த பகுதியில் ஊராட்சி செயலாளராக பணியில் உள்ளவர்தான், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் களப்பணியாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் ஊராட்சி மன்றத் தலைவரின் ஒப்புதல் இன்றி தன்னிச்சையாக, குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தொடர்ந்து பணிகளை வழங்கி வந்ததாகவும், பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர்களின் பணி அட்டைகளை பெற்றுக் கொண்டு, கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பணி வழங்காமல் அலைக்கழித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சாலையோர கடைகளை அடித்து நொறுக்கிய ஒற்றை யானை! பண்ணாரி அம்மன் கோயில் பக்தர்கள் அலறல்!
இது தொடர்பாக நேற்று (செப்.26) வேட்டமங்கலம் ஊராட்சி, மதுரை வீரன் நகர் பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் முத்துச்செல்வன், சிபிஎம் கட்சியின் கரூர் ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கரூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் பணி வழங்கப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்து மக்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து செய்தியாளரிடம் பேசிய அகில இந்திய விவசாய சங்க கரூர் மாவட்ட துணைத் தலைவர் முத்துச்செல்வன், “100 நாள் பணியில் ஈடுபட்ட பட்டியலின மக்களுக்கு கடந்த மூன்று மாதமாக பணி வழங்காமலும், அவர்களது பணிக்கான அடையாள அட்டையை வாங்கிக் கொண்டு திரும்ப கொடுக்க மறுக்கிறார்கள்.
நவீன தீண்டாமை தற்பொழுது கருர் மாவட்டத்தில் தலைவிரித்து ஆடுகிறது. குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் பணி வழங்காமல் புறக்கணிப்பது, ஒரு நவீன தீண்டாமை. 100 நாள் வேலைத் திட்டத்தில் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். பறிக்கப்பட்ட அடையாள அட்டையைத் திரும்ப வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக அதிகாரிகள் உடனடியாக அடையாள அட்டைகளை வழங்குவதாகவும், நாளை மறுநாள் 100 நாள் பணி வாய்ப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அதிகாரிகள் ஒப்புக்கொண்டபடி அனைத்து சமூகத்தினருக்கும் பணிகளை செயல்படுத்தாவிட்டால், வேட்டமங்கலம் ஊராட்சியில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாடிக்கையாளருக்கு புழு விழுந்த கேக் விற்பனை! அதிர்ந்து போன வாடிக்கையாளர்!