கரூர் மாவட்டம் கூட்டுறவுத்துறையின் சார்பில் 2019ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான 66ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தனியார் கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெருந்தலைவர் காளியப்பன், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணைய இயக்குநர் செல்வி, பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவின், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பங்கேற்றார். கூட்டுறவு வாரவிழா தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு நிறுவனங்களைப் பாராட்டியும் கோப்பைகள் வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தான், கூட்டுறவுத் துறை புத்துயிர் பெற்றது. வங்கித் துறை தொழில் துறையைச் சார்ந்தவர்களுக்கும், பெரும் முதலாளிகள் மட்டுமே பயனடையும் வகையில் செயல்பட்ட வேளையில், கிராமபுறப் பொருளாதாரமும் ஏழை, எளிய விவசாயிகளும் பயன்பெறும் வகையில் செயல்படும் ஒரே துறை கூட்டுறவுத் துறை என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்' எனக் கூறினார்.
மேலும் கரூர் மாவட்டத்தில் மட்டும் 50 விழுக்காடு மானியத்துடன் 94 டிராக்டர்கள் வாங்க கடனுதவி செய்யப்பட்டுள்ளது என அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரூரில் இயற்கை உரம் தயாரிப்பு - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை