கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பொருளாதார ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக ஒரு லட்சம் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் ஐந்து கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கும் பணியைப் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. கிருமி நாசினி, கையுறை, முகக் கவசம் ஆகியவை தேவைக்கு அதிகமாக இருப்பு உள்ளது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கரோனா தொற்றைக் கண்டறியும் 900 ரேபிட் கிட்கள் வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், "கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 112 நபர்களில் 53 நபர்கள் பூரண குணமடைந்து அவரவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு செயல்படாத அரசாக உள்ளது என சிலர் கூறுவது தவறானது. வைரஸ் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு முழு வீச்சில் செயல்பட்டுவருகிறது' எனக் கூறினார்.
இதையும் பார்க்க: ‘பாகிஸ்தான் வாழ்க’ முழக்கமெழுப்பி கைதான மாணவர்களின் வழக்கு ஒத்திவைப்பு!