கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் துறையின் சார்பில், 1058 அங்கன்வாடி பணியாளர்களுக்கு, ரூபாய் 90 லட்சம் மதிப்பில் ஆண்ட்ராய்டு கைப்பேசியை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய அமைச்சர், “அங்கன்வாடி பணியாளர்கள் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று குழந்தைகள் வளர்ச்சி பற்றி அறிந்து வர வேண்டும். அவர்களது வேலைப்பளுவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, மத்திய மாநில அரசுகள் இணைந்து கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இந்த கைப்பேசி திட்டம்.
ரூபாய் 8000 மதிப்புள்ள, இந்த கைப்பேசியை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. குறிப்பாக பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம், இந்தியாவிலேயே இங்குதான் குறைவாக உள்ளது.
இதேபோல போக்குவரத்துத்துறை, சுகாதாரத் துறையிலும் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உலக அளவில் இளைஞர்கள் அதிகம் கொண்ட இந்தியாவில், நம் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. மனித வளம் மேம்பட்டால்தான் இந்தியா வல்லரசாக முடியும்” என்று தனது உரையில் தெரிவித்துள்ளார்.