கரூர் மாவட்டம் புகளூரில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் சார்பில் சமுதாய நலப்பணித் திட்டத்தின்கீழ் 60.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத் தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் எம்.சி சம்பத், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரோஸி வெண்ணிலா உள்ளிட்டோரும் ஆலை அலுவலர்களும் கலந்துகொண்டனர். போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறுகையில், "தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் முயற்சியால் கொண்டுவரப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா, இன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகிய மூவரின் சீரிய முயற்சியால் இந்நிறுவனம் லாபகரமான முறையில் நடைபெற்றுவருகிறது. இந்நிறுவனத்திற்கு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பெயர் சூட்ட வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்திருக்கிறேன். அவற்றை தொழில் துறை அமைச்சர் முன்மொழிய வேண்டும்" எனக் கோரிக்கைவைத்தார்.