உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் பொது மக்கள் அதிகம் கூடும் இடமான காய்கறி சந்தையில் மக்கள் கூடுகையை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு திறந்தவெளி பகுதிகயில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.
அதனடிப்படையில், இன்று (மார்ச் 30ஆம் தேதி) கரூர் மாவட்டம் திருவள்ளூர் மைதானத்தில் காய்கறி விற்பனை நிலையம் தற்காலிகமாக திறக்கப்பட்டது. இதுபோன்று, காந்திகிராமம். தாந்தோணிமலை, வெங்கமேடு ஆகிய பகுதிகளில் காய்கறி விற்பனை நிலையம் திறக்கப்பட்டு மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளது .
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கரூர் பேருந்து நிலையம், திருவள்ளூர் மைதானம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக சந்தையை நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது வியாபாரிகளிடம் விலை நிர்ணயம் செய்துள்ளபடி காய்கறிகளை விற்பனை செய்யவேண்டும், குறிப்பிட்ட சமூக இடைவெளியை கடைபிடித்து காய்கறிகள் வழங்க வேண்டும் போன்ற விதிமுறைகளை வியாபாரிகளுக்கு எடுத்துரைத்தார்.