கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து, கேரளா மாநிலம் கோட்டையத்துக்கு 24 ஐடி நிறுவன ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் என, 27 நபர்களை ஏற்றி வந்த தனியார் பேருந்து, கரூர் கொங்கு கல்லூரி அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த தண்ணீர் லாரியுடன் மோதி விபத்தில் சிக்கியது. இதில் 24 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து விபத்துக்குள்ளான அனைவரும் முதலுதவி சிகிச்சைக்காக அருகில் இருந்த 3 தனியார் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, காயமடைந்த அனைவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே, காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்த தனியார் மருத்துவமனைகளின் நிறுவனர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் சிகிச்சைக்கான முழுச்செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும், அனைவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.
அதுமட்டுமல்லாமல், காயமடைந்த மற்றும் இதர ஊழியர்களையும் கேரளா மாநிலம் கோட்டயம் அழைத்துச் செல்ல கரூர் போக்குவரத்துக் கிளையில் இருந்து அரசு பேருந்தையும் அனுப்பி வைக்க அமைச்சர் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரத்யேக பேருந்து, கேரளா மாநிலம் செல்வதற்கான சிறப்பு அனுமதியை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உடனடியாக அளித்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஐடி நிறுவன ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் சிகிச்சைக்குப் பின்பு கேரள மாநிலம் கோட்டயத்துக்கு தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் அமர வைக்கப்பட்டு பாதுகாப்பாக அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஐடி ஊழியர்கள் சென்ற பேருந்து விபத்து!