கரூர் வெண்ணைமலை பசுபதிபாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் தனது வீட்டிற்கு மின் வடக்கம்பி மாற்றித் தரக் கோரி மண்மங்கலம் உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் (டிசம்பர்) 15ஆம் தேதி விண்ணப்பம் செய்துள்ளார். அரசு விதிமுறைப்படி இந்த மின் வடக்கம்பி மாற்றி அமைக்க அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணத் தொகை ரூ.38,240-க்கான டிடியை எடுத்து கடந்த மாதம் 29ஆம் தேதி அனுப்பியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, கடந்த 4ஆம் தேதி மின் வடக்கம்பி மாற்றி அமைக்கவந்த போர்மேன் குணசேகரன் என்பவர் மின் கம்பியை மாற்றி அமைத்துவிட்டு, வேலை முடிந்ததும் வீட்டின் உரிமையாளர் செந்தில்குமாரிடம் லஞ்சமாக ரூ.8000 கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத நிலையிலும், செந்தில்குமார் ரூ.4000 லஞ்சமாக கொடுத்துள்ளார். இதைப் பெற்றுக்கொண்ட குணசேகரன், மீதியுள்ள 4000த்தை கேட்டு வற்புறுத்தியுள்ளார்.
இதையடுத்து, மீண்டும் லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில்குமார், கரூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், இன்று (ஜன. 08) கரூர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் நடராஜன், ஆய்வாளர் பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் ஆலோசனைப்படி மண்மங்கலம் சிட்கோ அருகே உள்ள மின் வாரிய அலுவலகத்தில் இருந்த போர்மேன் குணசேகரனிடம் ரூ.3500 கொடுத்துள்ளார் செந்தில்குமார்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் குணசேகரனை கையும் களவுமாகப் பிடித்து கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க...பள்ளிகள் திறக்கவில்லை - திரையரங்கங்களுக்கு மட்டும் 100% அனுமதி எப்படி சாத்தியம்!