கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம், அருணாச்சல நகர் பள்ளிவாசல், ராயனூர், கோடங்கிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு முகாமில், தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கலந்துகொள்ள நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், கரூரில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக அமைச்சரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், குறித்த நேரத்தில் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் மனுக்களை பெற்றார்.
பின்னர் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கூறுகையில், “மழை பெய்தாலும் பொதுமக்களாகிய நீங்கள் ஏமாற்றமடைந்து திரும்பக் கூடாது என்பதற்காக, உங்கள் குறைகளை மனுவாக பெற வந்தேன். தற்போது ஆட்சியிலுள்ள தமிழ்நாடு அரசு, பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான விலையில்லாப் பொருட்களை வழங்கி கல்வியை ஊக்குவித்து வருகிறது. மேலும் பசுமை வீடு திட்டம், மருத்துவக் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பலவகையான திட்டங்களை வழங்கிய முன்னாள் முதலமைச்சர் நம்மை விட்டு மறைந்தாலும், அவருடைய திட்டங்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளது”. என உருக்கமாக பொதுமக்களிடையே பேசினார் .
தொடர்ந்து பேசிய அவர், தற்போது பொதுமக்கள் வழங்கும் பெரும்பாலான மனுக்கள் முதியோர் உதவித்தொகை சார்ந்ததாக உள்ளது எனவே தகுதியானவர்களுக்கு உதவித் தொகை வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் கூறினார்.