கரூர்: குளித்தலை ஊராட்சி ஒன்றியம் நாகனூர் அரசு ஆரம்ப பள்ளியில் தரமில்லாத முட்டைகள் இருப்பதாக நேற்று(டிச.24) ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதனையடுத்து இன்று(டிச.25) கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று உணவுப் பொருட்களின் தரங்களை ஆய்வு செய்து இருப்பு உள்ள முட்டைகளின் தரங்களையும் ஆய்வு செய்தார்.
மேலும் கூடுதல் நாட்களாக பழைய முட்டைகளை வைத்திருந்த சத்துணவு மைய அமைப்பாளர், சமையலர், பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்டோரை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தெரிவித்ததாவது, “நாகனூர் அரசு ஆரம்பப்பள்ளியில் சத்துணவுக்காக வழங்கப்பட்ட உணவுப்பொருட்கள் தரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து உணவுப் பொருட்களின் தரமும் நல்ல நிலையில் உள்ளது.
குறிப்பாக முட்டைகள் தண்ணீரில் இட்டு பரிசோதிக்கப்பட்டது. அதில் அனைத்து முட்டைகளும் தரமாக நல்ல நிலையில் உள்ளது. கடந்த வாரம் வழங்கப்பட்ட முட்டைகளை உரிய காலத்தில் வழங்காமல் கெட்டுப்போன முட்டைகளை வைத்திருந்தது கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் தேன்மொழி, சமையலர் லட்சுமி ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்தப் பணிகளை கண்காணிக்க தவறிய பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமியும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொதுமக்களும் மாணவர்களும் அச்சப்பட தேவையில்லை.
தரமான உணவுகள் அரசுப் பள்ளிகளில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், வட்டாட்சியர் விஜயா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: பழுதடைந்த கட்டடங்களை இடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் -மத்திய மண்டல காவல்துறைத் தலைவர்