கோவை மாவட்டம் குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனது மனைவி மகேஸ்வரி, மகன் பிரதீப், மருமகள் பிரதீபா ஆகியோருடன், மற்றொரு மகனின் திருமண அழைப்பிதழை வழங்க, கோவையிலிருந்து காரில் புறப்பட்டுள்ளனர். முதலில் தாராபுரத்தில் உறவினர்களை சந்தித்து பத்திரிக்கை வழங்கியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து, கரூரில் உள்ள உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்குவதற்கு சென்றுகொண்டிருந்தனர். காரை பிரதீப் ஓட்டிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூடாமணி பேருந்து நிறுத்தம் அருகே கார் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக, நால்வரையும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கருர் கொண்டு சென்றனர் . ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆறுமுகம், பிரதீப் உயிரிழந்தனர். மேலும்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேஸ்வரியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது, பிரதீபா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சின்னதாராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.